வேகமான உருவங்களை வரைதல் - படிப் படியான பயிற்சி முறை விளக்கம்

இதுதான் ஒரிஜினல் போட்டோ. ( இந்த போட்டோ எடுத்த தீபக் ஷங்கருக்கு நன்றி. (Thanks for the amazing shot! Photo credit - https://www.facebook.com/shankar.dipak ) )

ஒரு படம் உங்களை முதலில் ஈர்த்தது எதனால் என்பதை மறக்காதீர்கள். நீங்கள் எந்த முறையில் வரைந்தாலும் உங்களை எந்த அம்சம் முதலில் ஈர்த்ததோ அதை வெளிக் கொண்டு வருவதுதான் உங்கள் பிரதான வேலை.

இந்த போட்டோவை கவனமாக பார்த்தீர்கள் என்றால், இது side view இல்லை. இரண்டு மிருகங்களும் கேமராவை நோக்கி ஒரு angleல் ஓடி வருகின்றன. அதனால்தான் அவைகளின் நெஞ்சு பகுதி நமக்கு முழுமையாக தெரிகின்றது.
அந்த சிவப்பு கோடுகள் இந்த காட்சியின் பீறிடும் சக்தியை ( EXPLOSIVE ENERGY) வெளிக்கொணர்கிறது. அந்த energyதான் என்னை முதலில் இந்த படத்தில் ஈர்த்தது. ஆகையால் என் முக்கியமான வேலை அந்த சக்தியை கொண்டு வருவதுதான். மற்ற அம்சங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமே!

இந்த வளைவான கோடுகள் இந்த மிருகங்களை இணைக்கும் ராக அலைகள் ( ENERGY LINES). கவித்துவமான இந்த அலைகளை நான் என் படைப்பில் இழந்து விடக் கூடாது.

இப்போது அளவுகளுக்கு வருவோம். நான் இந்த மானின் உடலை என்னுடைய அடிப்படை அளவாக வைத்துக்கொண்டேன். அந்த நீளத்தை வைத்தே இந்த போட்டோவில் உள்ள எல்லா அம்சங்களையும் அளந்து குறித்துக் கொண்டேன்.

அந்த அடிப்படை அளவை வைத்தே நெட்டுக் குத்தான ( VERTICAL) அம்சங்களையும் குறித்துக் கொண்டேன்.

இப்போது என் அளவுகள், அவற்றின் விகிதங்கள் எனக்கு தெளிவாக இருக்கின்றது. ஆகையால், எந்த அளவு பேப்பராக இருந்தாலும், நான் நடு புள்ளியை தீர்மானித்துவிட்டால் மற்றவை எனக்கு எளிது. இரண்டு மிருகங்களையும் என் பேப்பரின் நடுவே எளிதாக வரைந்து விடலாம்.

இப்போது மெல்லிய கோடுகளால் இரு மிருகங்களின் உருவத்தை வரைந்தேன்.

உருவம் வந்து விட்டது. இப்போது உருவங்களின் பருமனை கோடுகளால் செதுக்கி மிருகங்களின் தலை, உடல், கால்களின் திடத்தை உறுதி செய்தால் கோடு உருவங்கள் தங்களின் உருண்டை அமைப்பை பெறுகின்றது.

வெளிச்சம் எவ்வாறு இந்த உருவங்களின் மேல் விழுகிறது என்பதை இப்போது குறித்துக் கொள்கிறோம். சில பாகங்கள் நிழலில் இருப்பதால் கருமை கூடுதலாகவும், சில பாகங்கள் வெளிச்சத்தில் இருப்பதை கவனித்து வரைகிறோம். முக்கியமாக மிகவும் கருமையான ( DARKEST DARK) ,மிகவும் வெளிச்சமான ( LIGHTEST LIGHT) எவை என்பதை நுட்பமாக வரைகிறோம்.
இந்த கட்டத்திற்கு பிறகு என்ன வரைந்தாலும் இந்த வெளிச்ச மதிப்பீடுகள் ( VALUES OF LIGHT) மாறவே கூடாது.

இப்போது சீட்டாவின் புள்ளிகள். கண்கள், வண்ணங்கள் ஆகிய விவரங்களை வரைகிறோம்.

கடைசி கட்டத்திற்கு வந்து விட்டோம்.நான் பேனா பிரஷை கொண்டு எங்கு டீடெயில்ஸ் தேவை என்பதை தீர்மானித்து
இரசிக்கக் கூடிய முரண்பாடுகள் (CONTRAST ) மற்றும் சிறப்பம்சங்கள் (HIGHLIGHTS) முதலியவற்றை வரைந்து படைப்பை முழுமை செய்கிறேன் 
.....................................................
S.SreeRam
NATHAN'S MEDIA GROUP
Mobile: 0 9380000555
Email: nathansmedia@gmail.com

Comments